Thursday, December 10, 2009

மாவீரர் கல்லறைகள் – கலங்கரை விளக்கங்கள்



வணக்கம் தமிழ் நெஞ்சங்களே!
இது கவிதை அல்ல!
இங்கு உறங்கிக் கொண்டிருக்கும் மாவீரர்களை
ஈன்ற உள்ளங்களின் உணர்வுகள்!

வாழைப் பந்தலிட்டு!
மாவிலைத் தோரணம் கட்டி!
மண மேள இசையமைத்து!
திருமணம் நடந்ததன்று!

சாதி சனம் பல கூடி!
வானிலே வெடி வெடித்து!
பல்சுவை விருந்தும் வைத்து!
சிகை அலங்காரம் இட்டு!
கலைகள் பற்பல நடத்தி!

இல்லற வாழ்வுதனில்
மகப் பேறு நாங்கள் பெற்று
பல்லாண்டு காலம் வாழ
வாழ்த்துக்கள் குவிந்ததன்று!

வாழ்த்துக்களும் தோற்கவில்லை!
வரங்களுக்கும் பஞ்சமில்லை!
வளங்களும் கைவிட்டதில்லை!
ஈழ மண்ணில்
வளங்களும் எமைக் கை விட்டதில்லை!

அழகான ஒரு பிள்ளை!
தமிழ் அன்னை ஈன்ரெடுத்த
அறிவான ஒரு பிள்ளை!

அப்பாவின் கைப் பிடித்து
நீ தத்தித் தத்தி நடந்த போது!
தரணியே எம் காலடியில்
என்று நாம் நினைத்ததுண்டு!

கொஞ்சும் உன் மழலை மொழி!
பிஞ்போன்ற உன் கரங்கள்!
அஞ்சாத உன் குறும்பு!
மிஞ்சும் உன் துடிதுடிப்பு!
கண்டித்த போதெல்லாம்
கள்ளச்சிரிப்பதனால்
எமைக் கட்டிப் போட்ட உன்
சுவையான சுட்டித்தனம்!
இவை கண்டு நாம் அன்று
இமயமே சென்றதுண்டு!

பள்ளிக்கூடம் நீ செல்ல
பருவமும் வந்த போது!
பக்குவமாய் உன் அறிவை
பார்த்துப் பார்த்து நாம்
பசியாறி ரசித்ததுண்டு!

கட்டுக் கட்டாய் செல்வங்கள்
காலடியில் இட்டாலும்!
இதுவன்றோ இன்பம் என்று
நாம் பூரித்த காலமுண்டு!

சிறுகச் சிறுகச் சேமித்து
எமக்கென்று ஒரு கூடு!
கருகிக் கருகி பாடுபட்டு
நமக்கென்று ஒரு வீடு!

கல்வி கலை விளையாட்டு
பல உனக்கு பயிற்சித்து
தமிழோடு பண்பாடும்
பாசமும் கலந்தூட்டி!

நாளை நம் ஈழ மண்ணில்
நல்லதொரு மனிதனாக
நீ நெஞ்சுயர்த்தி நடப்பதற்கு
நாம் இட்ட விதைகள் அவை!

விருதுகள் நீ பெறுவாய் என்று
கனவுகள் பல சுமந்து
கற்பனை கனவுலகில்
கடிகாரம் நகர்ந்ததுண்டு!

விழிகளை இமை தொடும் முன்னே
விடி வெள்ளி தோண்றியது!
விடி வெள்ளி பார்த்திருந்த எம் வானில்
தோண்றியதோ உயிர்க் கொல்லி!

ஆணவ அரசின்
அடக்குமுறை அதிகாரங்கள்!
மாண்டனர் மக்கள்!
மதம் கொண்ட காடையரால்!
சிதறிக்கிடந்தன உடல்கள்!
சிதைந்து போயின உடைமைகள்!

கற்பிழந்த மங்கையர்!
உறுப்பிழந்த முதியோர்கள்!
அறுந்து கிடந்த பிஞ்சுகள்!
அங்கமிழந்த ஆடவர்கள்!

பசிக்கொடுமை பொறுக்காது
மாண்டுபோன தன் தாய் மார்பில்
பால் தேடும் மழலைகள்!

ஐயோ என்ன கொடுமை இது?
ஆடிப்போனோம் அன்று!
நாம் என்ன பாவம் செய்தோம்?

என்ன செய்வோம் என்று எண்ணி
பொறுத்திருக்க நேரமில்லை!
தமிழினம் தலை நிமிர்ந்து
நம் மண்ணில் வாழ்வதற்கு!
தனி நாடு தான் அன்றி
வேரொரு விடிவுமில்லை!

நாளை மலரும் ஈழம் என்று!
வீட்டிற்கு வீடு ஒரு பிள்ளை
நாட்டிற்கு வேண்டுமென்று!
பார்த்துப் பார்த்து வளர்த்த
எம் பாசச் செல்வமுனை
கட்டி அணைத்து முத்தமிட்டு
களத்திற்கு போ என்று
வீரமுடன் சொன்ன போது
கலங்கவில்லை எங்கள் மனம்!

வீரமுடன் களத்தினில் நீ
சாதனைகள் செய்த போது
உனை ஈன்ற தனை எண்ணி
எம் மனம் நெகிழ்ந்ததுண்டு!

இனவெறி அரசினது
இழிவான செயல் கண்டு
ஓடி ஒளியாது
மோதி மோதி நின்று
புனிதப் போர் களத்ததனில்
புனிதனாய்ச் சாய்ந்தாய் என்ற
இடி போன்ற செய்தி
எம் இதயத்தைத் தாக்கியது!

களத்தில் நீ
மரணித்த செய்தி கேட்டு
நாம் மயிரிழையும் தளரவில்லை!

அன்னையின் அன்போடு
மண்ணிலே மலர்ந்த நீ
தமிழ் அன்னையின் மானம் காக்க
மண்ணிலே விதைந்தாய் என்று
கண்களிலே கசிந்த கண்ணீர்
கனம் என்னைத் தட்டியது!

என் கண்கள் கண்ணீரை மறுத்தது!
என் நெஞ்சம் சோகத்தை விரட்டியது!

தாய்
தாய் மொழி
தாய் மண்
இவையே நம் வேதங்கள்!
இவையே நம் போதனைகள்!

இதற்காக நீ மரணித்தாய்
என்று நாம் என்னுகையில்
உன்போன்ற பல பிள்ளை
எமக்கில்லை என்று எண்ணி
எம்மையே நாம் நொந்ததுண்டு!

நீ பிறந்தது மனிதனாக!
மண்ணில் விழைந்தது மா வீரனாக!
உன்போன்ற வீரர்கள் உறங்குவது
வெறும் கல்லறைகள் அல்ல!
கலங்கறை விளக்கங்கள்.

உறங்குபவர்கள் எங்கள் உறவுகள்!
அவர்கள் கனவுகள் நினைவாகட்டும்!

உறைந்து போன எங்கள் உதிரங்களை
சற்று சுண்டிப் பார்ப்போம்!
தளர்ந்து போன எமது நரம்புகளை
சற்று தட்டிப்பார்ப்போம்!

உணருவோம்! உயிர்த்தெழுவோம்!
ஒன்றுபடுவோம்! ஒத்துழைப்போம்!
இயங்குவோம்! இலக்கை அடைவோம்!


வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!


இவன்
ஈழன் இளங்கோ
சிட்னி, அவுஸ்திரேலியா

1 comment:

  1. kannerr varavazhaitha kavithai ithu. thiyagangalllai enni enni nenju vedikkirathu....ezhum eezham..

    ReplyDelete