Thursday, December 10, 2009

மறக்க முடியுமா இன்நாளை?


மறக்க முடியுமா இன்நாளை?

இரக்கமில்லா இனவெறி அரசின்
வெறியாட்டத்தில் விழைந்த வேதனை!
வான் படை பொழிந்த குண்டுகளின் பிடியில் சிதறி
சின்னா பின்னமாகிய நமது சின்னஞ்சிறார்கள்!
முளைத்த சில காலத்திலேயே
அழிக்கப் பட்ட பச்சிளம் பாலர்கள்!

மறக்க முடியுமா இன்நாளை?

ஈழத்து நெஞ்சங்களை எல்லாம்
துடிக்க வைத்த அந்த ஆடித்திங்கள் அதி காலை!
குடித்தது அவர்கள் உயிர்களை அல்ல
வெடித்துச் சிதறிய குண்டுகள் அழித்தது
அவர்கள் உடல்களை அல்ல!
மக்களுக்கு ஆணவ அரசின் மீது
எஞ்சி இருந்த மனிதாபிமானம்!

மறக்க முடியுமா இன்நாளை?

ஆடிப் பாடித்திரிந்த அந்த கோல மயில்கள் - இன்று
குவியல் குவியலாக அல்லவா குவிந்து கிடக்கின்றன!
கவிதை பாடிப்பறந்து திரிந்த அந்த கவிக்குயில்கள்
இன்று கருகி அல்லவா கிடக்கின்றன!
மணல் வீடு கட்டி விளையாடித்திரிந்த
அந்த சின்னஞ்சிறு குருவிகள்
இன்று பிணங்களாக அல்லவா பிளந்து கிடக்கின்றன!
மழலை பேசி தவழ்ந்து கிடந்த அந்த பிஞ்சு மனங்கள்
இன்று மடிந்தல்லவா போய்விட்டன!
மதியுள்ள எவராலும் இவ் ஈனச்செயலை
நினைத்துத்தான் பார்க்க முடியுமா?

மறக்க முடியுமா இன்நாளை?

இரட்டைப் பின்னலிட்டு!
பட்டுப்பாவாடை கட்டி!
சிரட்டையிலே பொட்டு வைத்து!
புத்தகம் ஏந்திய கைகள் அல்லவா
இன்று சிதறிக் கிடக்கின்றன!
இரக்கமில்லா இராணுவத்தின் கோரப் பசிக்கு இரையாகிக் கிடக்கின்றன!

மறக்க முடியுமா இன்நாளை?

துள்ளித்திரிந்த அந்த பிஞ்சு உள்ளங்கள்
பள்ளியிலே வெடித்த வெடி
இன்று அவர்களை நிரந்தரமாக அல்லவா
பள்ளிகொள்ளச் செய்திருக்கின்றன!
பாவிகள் வெறியாட்டத்திற்கு
விடிவே கிடையாதா!
தூளியிலே உறங்கிக்கிடந்த அந்த குஞ்சுகள்
இன்று குழியில் அல்லவா உறங்கிக்கிடக்கின்றன!

மறக்க முடியுமா இன்நாளை?

அலை அடித்த வேதனையே
இன்னும் மாறவில்லயே!
அதற்குள் இன்னொரு இடியா?
யாரிடம் சொல்லி அழுவோம்
எங்கள் சோதனையை?
நாங்கள் யாரிடம் சொல்லி அழுவோம்
எங்கள் இந்த சோதனையை?
நமது தேசமே இன்று கண்ணீர்
கடலில் மூழ்கிக்கிடக்கின்றதே!
கண்ணீர் சிந்தக்கூட எமது கண்களில்
கண்ணீர் இல்லயே!
பிறந்த நாள் முதல் இந்த கொடுங்கோல்
அரசின் காலத்தில் பிறந்த நாம்
அது ஒன்றைத்தானே செய்து வருகிறோம்!

மறக்க முடியுமா இன்நாளை?

கள்ளம் கபடம் அற்ற அந்தப்
பிஞ்சு உள்ளங்களில்தான் எத்தனை நினைவுகள்!
எத்தனை கனவுகள்!
எத்தனை கற்பனைகள்!
அத்தனையும் இன்று சுக்குனூறாகிக் கிடக்கின்றதே!
துள்ளித்திரிந்த அந்த மான்குட்டிகள் - இன்று
துவண்டு விழுந்து மடிந்து போயினவே!

மறக்க முடியுமா இன்நாளை?

தாயில்லா அந்த கன்றுகளின்
அம்மா என்ற இரங்கல் சத்தம்
உங்கள் உள்ளங்களை உருக்கவில்லையா?
மலர்ந்த மணம் மாறும் முன்னே – அவர்களை
மண்ணுக்கிரையாக்கி விட்டீர்களே!
தாயகத்தில் ஒவ்வொரு வீட்டுப் பூங்கா மலர்களும்
இன்று அஞ்சலி மலர்களாக அல்லவா மாறி இருக்கின்றன!

மறக்க முடியுமா இன்நாளை?

பாலரை பாடையில் இட்டதால்
நீங்கள் கண்ட பலந்தான் என்ன?
கொலைவெறி கொண்ட கொடுங்கோல் அரசே – நீங்கள்
இதற்குப் பதில் கூறியே தீரவேண்டும்!
உங்கள் நெஞ்சம் என்ன கல்லா?
கொஞ்சு மொழி பேசும் பஞ்சுபோன்ற
அந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்
நீங்கள் வஞ்சம் தீர்ப்பதற்கு!
இதுதான் உங்கள் வழியா?
பழி வாங்க பாலர்களை கொல்வதுதான் உங்கள் நெறியா?

வெம்பி வெடிக்குது எம் நெஞ்சம்!
வேதனையில் மூழ்கிக் கிடக்குது நம் தேசம்!
தஞ்சம் இல்லை என்று தானே இப்படிச் செய்தீர்கள்?
பொறுத்திருங்கள்..!
காலம் உங்களுக்கு பதில் கூறும்!
பொறுமை இழந்த எம் மக்கள்
பொங்கி எழுவர்.
போக்கிடம் அற்று நீங்கள் பொசுங்கிப் போவீர்.
பொங்கு தமிழ் இனத்திற்கு இன்னல் நேர்ந்தால்
சங்காரம் நிசமென சங்கே முழங்கும்
சங்கே முழங்கு… சங்கே முழங்கும்…!


ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா

No comments:

Post a Comment