Thursday, December 10, 2009

அன்புள்ள அண்ணா அக்கா!


அன்புள்ள அண்ணா அக்கா!
வெளி நாட்டில் வாழுகின்ற எனதருமை அண்ணா அக்கா!
உங்கள் மண்ணில் வாழ்ந்து வந்த உங்கள் தம்பி எழுதுகிறேன்!

ஒரு சில நொடிகளிலே பிரிந்துவிடும் எந்தனுயிர்
உயிர் பிரியும் சில நொடிக்குள்
ஓர் இரு வார்த்தைகளை
கூறிவிட்டு மடிவதற்கு
துடிக்கிறது எந்தன் மனம்!

உடல் என்று சொல்வதற்கு
சில துண்டு என் உடலில்
உயிரைப்பிடித்து வைக்க
இக்கணமோ எக்கணமோ
என் உயிரோ ஊசலிலே!

உங்களைப் போலவேதான்
நாங்களும் வாழ்ந்து வந்தோம்
வசதியினை கூறவில்லை
மன வசந்தத்தைக் கூறுகின்றேன்

பஞ்சு மெத்தை உறக்கமில்லை
பல மாடி பார்ததில்லை
வாகனங்கள் எமக்கில்லை
வண்ண வண்ண உடைகளில்லை
இவை இல்லை எண்று நாங்கள்
ஒருநாளும் அழுததில்லை

அம்மா அப்பாவுடன் ஓலைப்பாயினிலே
அருகில் தம்பி தங்கை
நடுவினிலே நான் உறங்க
வேறென்ன ஆனந்தம்
வேண்டும் என் வாழ்வினிலே?

கோயில் திருவிழாக்கள்
ஊரில் பண்டிகைகள்
வீட்டில் சுபதினங்கள்
பல உண்டு நம் வாழ்வதனில்
படிக்கப் பாடசாலை
அப்பப்போ விளையாட்டு
சாலை ஓரங்களில்
கிட்டிப்புள்ளு கிளித்தட்டு
சில்லுக்கோடு பேய்ப்பந்து
குண்டு கூட்டாஞ்சோறு
எவடம் எவடம் புளியடி புளியடி
இது போன்ற விளையாட்டு
விளையாடித்தீர்த்ததுண்டு

உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் என்றெல்லாம்
உறவுகள் பல உண்டு
பாச மழை பொழிவதற்கு
இதுவன்றோ வாழ்கை என்று
நான் - பூரித்த நாட்கள் உண்டு

அம்மா அப்பாவுடன்
வாழ்ந்துவரும் உங்களுக்கு
தாய் தந்தை பாசமதை
நான் கூறத் தேவை இல்லை

எமக்கொரு காய்ச்சல் என்றால்
கலங்கிடுவார் என் அப்பா
கல்லடி காயத்திற்கே
கதறிடுவாள் என் அம்மா
என் அம்மா என் அப்பா
என் கண் - முன் இங்கே
செல்லடி பட்டின்று
சிதறிக்கிடக்கின்றார்
உயிர் இன்னும் பிரியவில்லை
இதயம் துடிக்கிறது
அன்னை அன்பு பார்த்ததுண்டு
அன்பு தரும்
இதயத்தைப் பார்த்ததுண்டா யாரேனும்?
நான் இன்று பார்க்கின்றேன்
அம்மாவின் சிதையுன்ட உடலுக்குள்
இதயத்தைப் பார்க்கின்றேன்
துடிக்கிறது இதயம்
கவனம் மகன்
என்று சொல்லி
அடங்கும் தருணத்திலும்
என் மீது அன்பதற்கு

அப்பா முனங்குகிண்றார்
என் தம்பி பெயரைச் சொல்லி
தம்பியைத் தேடி
அவனையும் நான் கண்டெடுத்தேன்
தலையற்ற முண்டமாக
ஐயோ என்ன கொடுமை இது

என் உயிர் என் உடலில்
இன்னும் ஏன் இருக்கிறது
என்று நான் எண்ணுகையில்
செல் ஒன்று பறந்துவந்து
என் அருகே விழுந்ததின்று
துண்டு துண்டாய் என் கால்கள்
சிதறியதை நான் கண்டேன்
தொட்டுப் பார்ப்பதற்கு
ஒற்றைக் கையுண்டு
எட்டும் தூரத்தில்
மற்றகை ஒன்று
கால்களிலே பட்ட செல்
தலையினிலே விழுந்திருந்தால்
வலி ஒன்றும் இல்லாமல்
நானும்தான் சென்றிருப்பேன்

சொல்லிப் புரிவதில்லை
நாம் படும் பாடிங்கு
திரும்பும் இடமெல்லாம்
எலும்பும் சதைத் துண்டுகளும்
கண்களில் தெரிவதெல்லாம்
இரத்த சீற்றம்
காற்றில் வருவதெல்லாம்
குருதி வாசம்
வீட்டுக்கு வீடு சடலம்
வீதிக்கு வீதி சமாதி
இறைவன் என்றொருவன்
இவ்வுலகில் உண்டென்றால்
அவனிடம் நான் வேண்டுவது
அதிகம் ஒன்றும் இல்லை
என் உயிரை எடுத்து விடு
எம் இனத்தைக் காத்துவிடு
இவ்வளவு இழப்பினிலும்
இறப்பின் விளிம்பினிலும்
இன்னும் ஒரு மனக்கவலை
மலரும் ஈழத்தை
நான் பார்க்க முடியாதா?
விடுதலை மண்ணை நான்
தொட்டுணற முடியாதா?
சுதந்திர காற்றை நான்
சுவாசிக்க முடியாதா?
எதற்கிந்த தியாகங்கள்?

நாம் படும் துன்பங்கள்
நம்மோடு போகட்டும்
இனி வரும் சமுதாயம்
ஈழத்தில் வாழட்டும்
இனிதே வாழட்டும்
எனது ஈழ மக்களுக்கு
என்னுயிரைக் கொடுக்கின்றேன்

என் அருமை அண்ணா அக்கா
உங்களிடம் நான் கேட்பதெலாம்
ஒன்றே ஒன்றுதான்
இவ்வுலக மக்களுக்கு
நாம் படும் படுதுயரை
எடுத்துக் கூறுங்கள்
என்ன நடக்குதென்று
அறியாமல் இருப்பவர்கள்
எமது இனம் அழிவதனை
அறிந்து கொள்ளட்டும்
யார் யாரோ என்றிருக்கும்
இவ்வுலக மக்களிலே
யாரேனும் எங்களுக்கு
கை கொடுக்க மாட்டாரா?
கண் துடைக்க மாட்டாரா?
என் தம்பி அழைக்கின்றான்
சென்று நான் வருகின்றேன்!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!

ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா

No comments:

Post a Comment