Friday, October 19, 2018
Monday, January 17, 2011
காவியப் பெண்ணே இசைப்பிரியா

ஈழத்தமிழர் இதயங்களில் இமயமானவள் நீ
வாழ்ந்த போதும் இனத்திற்கு வளங்கள் செய்தவள் நீ
வாழ்வு முடியும் போதும் முடிந்த போதும் காவியமானவள் நீ
இறந்த பின்னும் இனத்திற்கு இனிதே செய்தவள் நீ
உன் உருவம் கண்ட உலகிற்கெமது உரிமை சொன்னவள் நீ
நெஞ்சை உருக வைத்தவள் நீ
கலக்கமில்லா எண்ணம் கொண்ட ஓவிய பெண் அவள் நீ
இழக்க முடியா இழப்பை எல்லாம் எமக்காய் இழந்தவள் நீ
உடைந்து உருகி உணர்வைப் பிழிந்து நன்றி கூறுகின்றோம்
நன்றி என்ற வார்த்தை மட்டும் நன்று இல்லையடி
உலகில் இறைவன் என்றொருவன் எமக்கு வேண்டுமென்றால்
உன் உருவம் அன்றி வேறெதையும் எம் இனம் கொண்டிடுமோ?
முடிந்து விழுந்து மடிந்த பின்னும் உன் காலடி நாம் தொழுவோம்!
இந்த உலகம் இருக்கும் இறுதிக்கணமும் உன் பெயர் நாம் மறவோம்
தமிழ் அன்னை உன் வடிவே என்று கொண்டுனை அம்மா என்றிடுவோம்
தமிழ் அன்னை நீ என்றிடுவோம்!
ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா
05/12/2010
Sunday, January 17, 2010
கண்ணீர்ப் பொங்கல்!

கதிரவனை வரவேற்று
முத்தமதில் கோலமிட்டு
வர்ணம் பல கொண்ட
வண்ண உடை உடுத்தி
ரத்த பந்தம் ஒண்று கூடி
சுற்றம் சூழல் சூழ்ந்திருந்து!
புதுப் பானை முகம் சிரிக்க
மாவிலை அலங்கரிக்க
நீறொடு சந்தனமும்
பூவும் பொட்டும் கமகமக்க
சாம்பிராணி புகை பறக்க
ஊதுபத்தி சுருள் புகைக்க
மணி ஓசையோடு மேள சத்தம்
நாதஸ்வரம் காதினிக்க
இறைவனை வழிபட்டு
இன்னிசை செவி இனிக்க
பொங்கும் மனம் போலே
பொங்க வேண்டும் தைப்பொங்கல்!
தோழியரும் கூடி
ஆட்டம் பல ஆடி
நாடிக் கூடிப் பாடி
வீடு பல சென்று
பொங்கலோடு பலகாரம்
முக்கனியும் கரும்பும் உண்டு
போதும் போதும் என்று
திகட்டும் வரை ருசிக்க
ஆசையோ ஆசை!
அடிமனதில் ஆசை!
அளவில்லா ஆசை!
அழிவில்லா ஆசை!
ஈழ மண்ணில் வாழ்கின்ற
இனிய தமிழ் மக்களுக்கு
ஆசைப்பட மட்டும்
அளவில்லா ஆசை!
கனவான ஆசைகள்
கைகூடும் நாள் எதுவோ?
காடையர் வசம் இன்று
சிறை வாசம் கொண்டிருக்கும்
என் கணவன் வந்தாலே
எனக்கினி பொங்கல் என்று
கண்ணீர் கசிந்த வண்ணம்
காத்திருக்கும் மங்கையரும்
முள்வேலி முற்றத்துள்
முடங்கி கிடக்கின்ற
என் அண்ணா வந்தாலே
எமக்கினி பொங்கல் என்று
ஏங்கிக் காத்திருக்கும்
ஏராள உள்ளங்களும்!
ஓடி ஆட முடியாது
போரிலே உறுப்பிழந்து
ஏக்கத்தில் பார்த்திருக்கும்
பரிதாப பிஞ்சுகளும்
பொங்க வேண்டும் பொங்கல்
புன்னகை முகத்தோடு
ஈழ மண்ணில்
பொங்க வேண்டும் பொங்கல்
விடுதலைக் காற்றோடு!
கலக்கங்கள் நாம் மறந்து
பொங்கலோ பொங்கல் என்று
பொலிவான முகத்தோடு
பொங்கிடும் நாள் தொலைவில் இல்லை
காத்திருங்கள் கை கூடும்
பொன்னான நாள் நமக்கு
பொங்கிடும் நாள் தொலைவில் இல்லை
காத்திருங்கள் கை கூடும்
பொன்னான நாள் நமக்கு
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!
இவன்
ஈழன் இளங்கோ
சிட்னி, அவுஸ்திரேலியா.
14 – 01 - 2010
Thursday, December 10, 2009
கதிரவனாய் அவன் வருவான் நம் கண்ணீரை துடைத்திடுவான்!

கல்தோன்றி மண்தோண்றா
காலத்து தமிழினம்
செந்நீரை கண்ணீராய்
வடிக்கிறது தினம் தினம்!
நம்நாடு நம் வீடு
என்றிருந்த ஒரு நேரம்
நமக்கொரு நாதியில்லை
என்று போன ஒரு காலம்!
ஓடி ஒளிவதற்கு
கோழையல்ல நம்மினம்
கூடி அழிவதற்கு
தேவையில்லை எம்மிடம்!
ஈழத்தாய் ஈன்றெடுத்த
வீரத்தலை மகன் நீ!
வீரத்தாய் பெற்றெடுத்த
தளராத நிறைகுடம் நீ!
தமிழ் அன்னை நமக்களித்த
இணை இல்லா பொக்கிசம் நீ!
இல்லாமல் போனாய் என்று
சிலர் அன்று கூறுகையில்
கணம் என் மனம் கூட
கள்ளி மரம் ஏறியது!
கணக்குப் போடுவது
கைவந்த கலை உனக்கு
காணாமல் போனாய் என்றால்
கணக்குப் பிழை எம்மதுவே!
நமது இன அழிப்புதனை
சிங்களம் நிறுத்துதற்கு
அனல் பறவை முத்தமிட்டு
பகைவனை நீ நடுங்கவைத்தாய்
நெஞ்சதனை கல்லாக்கி
நம் இனத்து களைகளையும்
கட்சிதமாய் களைந்தெடுத்தாய்!
அன்னிய நாடொன்று
நய வஞ்சகமாக
நம் இனம் அழிவதற்கு
துணைபோன போதினிலே
அவனையும் வென்றெடுத்த
இனையற்ற மன்னவன் நீ!
அதற்காக நீ அடைந்த
அவப்பெயரும் நாமறிவோம்!
அண்ணண் அக்கா மட்டுமில்லை
அன்னை பிதா என்ற போதும்
இழப்பதற்கு நாங்கள் தயார்
என்ற உன் உரையதனின்
உண்மையும் நாம் அறிவோம்!
அவப்பேறு உன் மீது
பழி கூறும் எவரேனும்
தமிழன்னை ஈன்றெடுத்த
மகனாக இருக்காது
அவர் எண்ணம் குற்றம்!
எண்ணும் உறுப்புக் குற்றம்!
உறுப்பின் படைப்புக்குற்றம்!
படைப்பின் பிறப்பில் குற்றம்!
நீ வருவாய் என்பதனில்
எள்ளளவும் கள்ளமில்லை!
நீ வரும் வரை இனத்தை
யார் வழி நடத்துவது?
என்பதனில் சில பேர்க்கு
பல மாறு கருத்துண்டு!
கண்முன் நீ இருந்து
நம்பகமாய் கைகாட்டி
இவர் இவர் இதற்கென்று
நியமித்த அவ்வவரை
நீ சொன்ன வாக்காக
நம் இனத்தோர்
எண்ண வேண்டும்!
கருத்ததனில் வேறுபாடு
இல்லாத இனம் இல்லை!
இல்லாத இனம் என்றும்
முன்னேறி வாழ்ந்ததில்லை!
எது இருந்த போதினிலும்
இக்கட்டு நிலை இதனில்
குள்ள நரிக்கூட்டங்கள்
ஊடுருவக் காத்திருக்கும்!
ஊடுருவல் எம் இனத்தின்
பல்லாண்டு தாகமதை
எள்ளளவும் எண்ணாமல்
அடியோடு அறுத்தெறியும்!
சிந்தித்து செயல் படுங்கள்
சேதமதை தவிர்த்திடுங்கள்!
காட்டுக்குள் தவமிருந்து
நாட்டுக்குள் களமாடி
தளம் பல பல கொண்ட
தமிழ் தாகம் கொண்டவன் நீ!
மண்டியிட்டு வாழ்வதற்கு
நெஞ்சுயர்த்தி மடிவது மேல்
எண்றுரைத்த உன்னதன் நீ!
கண்களிலே காந்த சக்தி!
கழுத்தினிலே கசப்பு வில்லை!
கருத்ததனில் வீர வேங்கை!
களத்தினிலே கரும்புலி!
நீ பிறந்த மண்னதனில்
காதல் கீதம்கூட
காதலிக்கும் தேசமதை!
கடுமழை பொழிந்தபோதும்
கார்மேகம் சூழ்ந்த போதும்
கானகம் கறுத்த போதும்
கடல் எம்மை வதைத்த போதும்
கடவுளும் கை
விட்டபோதும்
காவலனாய் நீ இருந்தாய்!
கனல் பந்தம் கையில் ஏந்தி
நீ கார் இருளை கடைந்த போது
கர்வமாய் உன் உருவம்
கவ்வியது எம் மனதை!
உன்போன்ற பெருந்தலைவன்
கரியாகி விட்டானாம்
காடையர்கள் கூறுகிறார்!
கணம் கூட கருத வேண்டாம்
கறுப்பு தினம் அனுசரிக்க!
கவனமாய் உள்ளான் அவன்
கருத்ததனில் மாறு வேண்டாம்!
கலங்கிடாதே மறத்தமிழா
இனத்திற்கு வேண்டுகையில்
காடயரை களமாட
கட்டாயம் கண் திறப்பான்!
எப்போது கட்டாயம்
என்பதுவும் அவன் அறிவான்!
கதிரவனாய் அவன் வருவான்
நம் கண்ணீரை துடைத்திடுவான்!
கதிரவனாய் அவன் வருவான்
நம் கண்ணீரை துடைத்திடுவான்!
ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா
வாழ்க நீ பல்லாண்டு!

வாழ்க நீ பல்லாண்டு!
பிறந்தநாள் வாழ்துரைக்க
பெரியவனல்ல நான் உனக்கு!
உனக்கென்று கூறுகையில்
கவிதை மேல் வெறுப்பெனக்கு
அது உன்மீது நான்
வைத்திருக்கும் விருப்பு!
இவ்வுலகில் நீ வாழ
என்னுயிரை வேண்டுமென்றால்
எமனிடம் நான்
கொடுத்துடுவேன் எக்கணமும
நீ வாழ என்னுயிரை
கொடுத்துடுவேன் எக்கணமும்!
வாழ்க நீ பல்லாண்டு!
தமிழினம் தலை நிமிர்ந்து
இம்மண்ணில் வாழ்வதற்கு
நீ இன்றி வேறொருவன்
பிறந்தாலும் இயலாது!
உன் வீரம் விழைந்த பூமி இது!
நீ விதைத்த விதைகள் பல நூறு!
மலர்ந்த காதல் மலரும் முன்னே
மடிந்த உள்ளங்கள் பல வேறு!
மண்ணின் மீது
மலர்ந்த காதல் மலரும் முன்னே
மடிந்த உள்ளங்கள் பல வேறு!
வாழ்க நீ பல்லாண்டு!
ஒப்பில்லை இவ்வுலகில் உனக்கொருவன்
ஈரேழு ஜென்மங்கள்
என்றொண்டு இருந்துவிட்டால்
அத்துனை பிறப்பினிலும்
உன்னினைவில் நாம் வாழ்வோம்!
உன்பெயரை உச்சரிக்க
கரு கூட புறப்படும் களம நோக்கி
நம் மண்ணை மீட்பதற்க்கு!
வாழ்க நீ பல்லாண்டு!
நம்மண்ணில் நீ பிறந்த இன்நாளை
இன் நன்நாளை
நம் நாடே கொண்டாடும் நன்றி சொல்லி
நம் தலைவன் வாழ்கவென்று!
கருவரை முதல் கல்லரை வரை
வாழ்த்திடுமே நம் தலைவன் வாழ்கவென்று!
வாழ்க நீ பல்லாண்டு வாழ்க நீ பல்லாண்டு!!
ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா
மறக்க முடியுமா இன்நாளை?

மறக்க முடியுமா இன்நாளை?
இரக்கமில்லா இனவெறி அரசின்
வெறியாட்டத்தில் விழைந்த வேதனை!
வான் படை பொழிந்த குண்டுகளின் பிடியில் சிதறி
சின்னா பின்னமாகிய நமது சின்னஞ்சிறார்கள்!
முளைத்த சில காலத்திலேயே
அழிக்கப் பட்ட பச்சிளம் பாலர்கள்!
மறக்க முடியுமா இன்நாளை?
ஈழத்து நெஞ்சங்களை எல்லாம்
துடிக்க வைத்த அந்த ஆடித்திங்கள் அதி காலை!
குடித்தது அவர்கள் உயிர்களை அல்ல
வெடித்துச் சிதறிய குண்டுகள் அழித்தது
அவர்கள் உடல்களை அல்ல!
மக்களுக்கு ஆணவ அரசின் மீது
எஞ்சி இருந்த மனிதாபிமானம்!
மறக்க முடியுமா இன்நாளை?
ஆடிப் பாடித்திரிந்த அந்த கோல மயில்கள் - இன்று
குவியல் குவியலாக அல்லவா குவிந்து கிடக்கின்றன!
கவிதை பாடிப்பறந்து திரிந்த அந்த கவிக்குயில்கள்
இன்று கருகி அல்லவா கிடக்கின்றன!
மணல் வீடு கட்டி விளையாடித்திரிந்த
அந்த சின்னஞ்சிறு குருவிகள்
இன்று பிணங்களாக அல்லவா பிளந்து கிடக்கின்றன!
மழலை பேசி தவழ்ந்து கிடந்த அந்த பிஞ்சு மனங்கள்
இன்று மடிந்தல்லவா போய்விட்டன!
மதியுள்ள எவராலும் இவ் ஈனச்செயலை
நினைத்துத்தான் பார்க்க முடியுமா?
மறக்க முடியுமா இன்நாளை?
இரட்டைப் பின்னலிட்டு!
பட்டுப்பாவாடை கட்டி!
சிரட்டையிலே பொட்டு வைத்து!
புத்தகம் ஏந்திய கைகள் அல்லவா
இன்று சிதறிக் கிடக்கின்றன!
இரக்கமில்லா இராணுவத்தின் கோரப் பசிக்கு இரையாகிக் கிடக்கின்றன!
மறக்க முடியுமா இன்நாளை?
துள்ளித்திரிந்த அந்த பிஞ்சு உள்ளங்கள்
பள்ளியிலே வெடித்த வெடி
இன்று அவர்களை நிரந்தரமாக அல்லவா
பள்ளிகொள்ளச் செய்திருக்கின்றன!
பாவிகள் வெறியாட்டத்திற்கு
விடிவே கிடையாதா!
தூளியிலே உறங்கிக்கிடந்த அந்த குஞ்சுகள்
இன்று குழியில் அல்லவா உறங்கிக்கிடக்கின்றன!
மறக்க முடியுமா இன்நாளை?
அலை அடித்த வேதனையே
இன்னும் மாறவில்லயே!
அதற்குள் இன்னொரு இடியா?
யாரிடம் சொல்லி அழுவோம்
எங்கள் சோதனையை?
நாங்கள் யாரிடம் சொல்லி அழுவோம்
எங்கள் இந்த சோதனையை?
நமது தேசமே இன்று கண்ணீர்
கடலில் மூழ்கிக்கிடக்கின்றதே!
கண்ணீர் சிந்தக்கூட எமது கண்களில்
கண்ணீர் இல்லயே!
பிறந்த நாள் முதல் இந்த கொடுங்கோல்
அரசின் காலத்தில் பிறந்த நாம்
அது ஒன்றைத்தானே செய்து வருகிறோம்!
மறக்க முடியுமா இன்நாளை?
கள்ளம் கபடம் அற்ற அந்தப்
பிஞ்சு உள்ளங்களில்தான் எத்தனை நினைவுகள்!
எத்தனை கனவுகள்!
எத்தனை கற்பனைகள்!
அத்தனையும் இன்று சுக்குனூறாகிக் கிடக்கின்றதே!
துள்ளித்திரிந்த அந்த மான்குட்டிகள் - இன்று
துவண்டு விழுந்து மடிந்து போயினவே!
மறக்க முடியுமா இன்நாளை?
தாயில்லா அந்த கன்றுகளின்
அம்மா என்ற இரங்கல் சத்தம்
உங்கள் உள்ளங்களை உருக்கவில்லையா?
மலர்ந்த மணம் மாறும் முன்னே – அவர்களை
மண்ணுக்கிரையாக்கி விட்டீர்களே!
தாயகத்தில் ஒவ்வொரு வீட்டுப் பூங்கா மலர்களும்
இன்று அஞ்சலி மலர்களாக அல்லவா மாறி இருக்கின்றன!
மறக்க முடியுமா இன்நாளை?
பாலரை பாடையில் இட்டதால்
நீங்கள் கண்ட பலந்தான் என்ன?
கொலைவெறி கொண்ட கொடுங்கோல் அரசே – நீங்கள்
இதற்குப் பதில் கூறியே தீரவேண்டும்!
உங்கள் நெஞ்சம் என்ன கல்லா?
கொஞ்சு மொழி பேசும் பஞ்சுபோன்ற
அந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்
நீங்கள் வஞ்சம் தீர்ப்பதற்கு!
இதுதான் உங்கள் வழியா?
பழி வாங்க பாலர்களை கொல்வதுதான் உங்கள் நெறியா?
வெம்பி வெடிக்குது எம் நெஞ்சம்!
வேதனையில் மூழ்கிக் கிடக்குது நம் தேசம்!
தஞ்சம் இல்லை என்று தானே இப்படிச் செய்தீர்கள்?
பொறுத்திருங்கள்..!
காலம் உங்களுக்கு பதில் கூறும்!
பொறுமை இழந்த எம் மக்கள்
பொங்கி எழுவர்.
போக்கிடம் அற்று நீங்கள் பொசுங்கிப் போவீர்.
பொங்கு தமிழ் இனத்திற்கு இன்னல் நேர்ந்தால்
சங்காரம் நிசமென சங்கே முழங்கும்
சங்கே முழங்கு… சங்கே முழங்கும்…!
ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா
அன்புள்ள அண்ணா அக்கா!

அன்புள்ள அண்ணா அக்கா!
வெளி நாட்டில் வாழுகின்ற எனதருமை அண்ணா அக்கா!
உங்கள் மண்ணில் வாழ்ந்து வந்த உங்கள் தம்பி எழுதுகிறேன்!
ஒரு சில நொடிகளிலே பிரிந்துவிடும் எந்தனுயிர்
உயிர் பிரியும் சில நொடிக்குள்
ஓர் இரு வார்த்தைகளை
கூறிவிட்டு மடிவதற்கு
துடிக்கிறது எந்தன் மனம்!
உடல் என்று சொல்வதற்கு
சில துண்டு என் உடலில்
உயிரைப்பிடித்து வைக்க
இக்கணமோ எக்கணமோ
என் உயிரோ ஊசலிலே!
உங்களைப் போலவேதான்
நாங்களும் வாழ்ந்து வந்தோம்
வசதியினை கூறவில்லை
மன வசந்தத்தைக் கூறுகின்றேன்
பஞ்சு மெத்தை உறக்கமில்லை
பல மாடி பார்ததில்லை
வாகனங்கள் எமக்கில்லை
வண்ண வண்ண உடைகளில்லை
இவை இல்லை எண்று நாங்கள்
ஒருநாளும் அழுததில்லை
அம்மா அப்பாவுடன் ஓலைப்பாயினிலே
அருகில் தம்பி தங்கை
நடுவினிலே நான் உறங்க
வேறென்ன ஆனந்தம்
வேண்டும் என் வாழ்வினிலே?
கோயில் திருவிழாக்கள்
ஊரில் பண்டிகைகள்
வீட்டில் சுபதினங்கள்
பல உண்டு நம் வாழ்வதனில்
படிக்கப் பாடசாலை
அப்பப்போ விளையாட்டு
சாலை ஓரங்களில்
கிட்டிப்புள்ளு கிளித்தட்டு
சில்லுக்கோடு பேய்ப்பந்து
குண்டு கூட்டாஞ்சோறு
எவடம் எவடம் புளியடி புளியடி
இது போன்ற விளையாட்டு
விளையாடித்தீர்த்ததுண்டு
உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் என்றெல்லாம்
உறவுகள் பல உண்டு
பாச மழை பொழிவதற்கு
இதுவன்றோ வாழ்கை என்று
நான் - பூரித்த நாட்கள் உண்டு
அம்மா அப்பாவுடன்
வாழ்ந்துவரும் உங்களுக்கு
தாய் தந்தை பாசமதை
நான் கூறத் தேவை இல்லை
எமக்கொரு காய்ச்சல் என்றால்
கலங்கிடுவார் என் அப்பா
கல்லடி காயத்திற்கே
கதறிடுவாள் என் அம்மா
என் அம்மா என் அப்பா
என் கண் - முன் இங்கே
செல்லடி பட்டின்று
சிதறிக்கிடக்கின்றார்
உயிர் இன்னும் பிரியவில்லை
இதயம் துடிக்கிறது
அன்னை அன்பு பார்த்ததுண்டு
அன்பு தரும்
இதயத்தைப் பார்த்ததுண்டா யாரேனும்?
நான் இன்று பார்க்கின்றேன்
அம்மாவின் சிதையுன்ட உடலுக்குள்
இதயத்தைப் பார்க்கின்றேன்
துடிக்கிறது இதயம்
கவனம் மகன்
என்று சொல்லி
அடங்கும் தருணத்திலும்
என் மீது அன்பதற்கு
அப்பா முனங்குகிண்றார்
என் தம்பி பெயரைச் சொல்லி
தம்பியைத் தேடி
அவனையும் நான் கண்டெடுத்தேன்
தலையற்ற முண்டமாக
ஐயோ என்ன கொடுமை இது
என் உயிர் என் உடலில்
இன்னும் ஏன் இருக்கிறது
என்று நான் எண்ணுகையில்
செல் ஒன்று பறந்துவந்து
என் அருகே விழுந்ததின்று
துண்டு துண்டாய் என் கால்கள்
சிதறியதை நான் கண்டேன்
தொட்டுப் பார்ப்பதற்கு
ஒற்றைக் கையுண்டு
எட்டும் தூரத்தில்
மற்றகை ஒன்று
கால்களிலே பட்ட செல்
தலையினிலே விழுந்திருந்தால்
வலி ஒன்றும் இல்லாமல்
நானும்தான் சென்றிருப்பேன்
சொல்லிப் புரிவதில்லை
நாம் படும் பாடிங்கு
திரும்பும் இடமெல்லாம்
எலும்பும் சதைத் துண்டுகளும்
கண்களில் தெரிவதெல்லாம்
இரத்த சீற்றம்
காற்றில் வருவதெல்லாம்
குருதி வாசம்
வீட்டுக்கு வீடு சடலம்
வீதிக்கு வீதி சமாதி
இறைவன் என்றொருவன்
இவ்வுலகில் உண்டென்றால்
அவனிடம் நான் வேண்டுவது
அதிகம் ஒன்றும் இல்லை
என் உயிரை எடுத்து விடு
எம் இனத்தைக் காத்துவிடு
இவ்வளவு இழப்பினிலும்
இறப்பின் விளிம்பினிலும்
இன்னும் ஒரு மனக்கவலை
மலரும் ஈழத்தை
நான் பார்க்க முடியாதா?
விடுதலை மண்ணை நான்
தொட்டுணற முடியாதா?
சுதந்திர காற்றை நான்
சுவாசிக்க முடியாதா?
எதற்கிந்த தியாகங்கள்?
நாம் படும் துன்பங்கள்
நம்மோடு போகட்டும்
இனி வரும் சமுதாயம்
ஈழத்தில் வாழட்டும்
இனிதே வாழட்டும்
எனது ஈழ மக்களுக்கு
என்னுயிரைக் கொடுக்கின்றேன்
என் அருமை அண்ணா அக்கா
உங்களிடம் நான் கேட்பதெலாம்
ஒன்றே ஒன்றுதான்
இவ்வுலக மக்களுக்கு
நாம் படும் படுதுயரை
எடுத்துக் கூறுங்கள்
என்ன நடக்குதென்று
அறியாமல் இருப்பவர்கள்
எமது இனம் அழிவதனை
அறிந்து கொள்ளட்டும்
யார் யாரோ என்றிருக்கும்
இவ்வுலக மக்களிலே
யாரேனும் எங்களுக்கு
கை கொடுக்க மாட்டாரா?
கண் துடைக்க மாட்டாரா?
என் தம்பி அழைக்கின்றான்
சென்று நான் வருகின்றேன்!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!
ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா
Subscribe to:
Posts (Atom)