
கதிரவனை வரவேற்று
முத்தமதில் கோலமிட்டு
வர்ணம் பல கொண்ட
வண்ண உடை உடுத்தி
ரத்த பந்தம் ஒண்று கூடி
சுற்றம் சூழல் சூழ்ந்திருந்து!
புதுப் பானை முகம் சிரிக்க
மாவிலை அலங்கரிக்க
நீறொடு சந்தனமும்
பூவும் பொட்டும் கமகமக்க
சாம்பிராணி புகை பறக்க
ஊதுபத்தி சுருள் புகைக்க
மணி ஓசையோடு மேள சத்தம்
நாதஸ்வரம் காதினிக்க
இறைவனை வழிபட்டு
இன்னிசை செவி இனிக்க
பொங்கும் மனம் போலே
பொங்க வேண்டும் தைப்பொங்கல்!
தோழியரும் கூடி
ஆட்டம் பல ஆடி
நாடிக் கூடிப் பாடி
வீடு பல சென்று
பொங்கலோடு பலகாரம்
முக்கனியும் கரும்பும் உண்டு
போதும் போதும் என்று
திகட்டும் வரை ருசிக்க
ஆசையோ ஆசை!
அடிமனதில் ஆசை!
அளவில்லா ஆசை!
அழிவில்லா ஆசை!
ஈழ மண்ணில் வாழ்கின்ற
இனிய தமிழ் மக்களுக்கு
ஆசைப்பட மட்டும்
அளவில்லா ஆசை!
கனவான ஆசைகள்
கைகூடும் நாள் எதுவோ?
காடையர் வசம் இன்று
சிறை வாசம் கொண்டிருக்கும்
என் கணவன் வந்தாலே
எனக்கினி பொங்கல் என்று
கண்ணீர் கசிந்த வண்ணம்
காத்திருக்கும் மங்கையரும்
முள்வேலி முற்றத்துள்
முடங்கி கிடக்கின்ற
என் அண்ணா வந்தாலே
எமக்கினி பொங்கல் என்று
ஏங்கிக் காத்திருக்கும்
ஏராள உள்ளங்களும்!
ஓடி ஆட முடியாது
போரிலே உறுப்பிழந்து
ஏக்கத்தில் பார்த்திருக்கும்
பரிதாப பிஞ்சுகளும்
பொங்க வேண்டும் பொங்கல்
புன்னகை முகத்தோடு
ஈழ மண்ணில்
பொங்க வேண்டும் பொங்கல்
விடுதலைக் காற்றோடு!
கலக்கங்கள் நாம் மறந்து
பொங்கலோ பொங்கல் என்று
பொலிவான முகத்தோடு
பொங்கிடும் நாள் தொலைவில் இல்லை
காத்திருங்கள் கை கூடும்
பொன்னான நாள் நமக்கு
பொங்கிடும் நாள் தொலைவில் இல்லை
காத்திருங்கள் கை கூடும்
பொன்னான நாள் நமக்கு
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!
இவன்
ஈழன் இளங்கோ
சிட்னி, அவுஸ்திரேலியா.
14 – 01 - 2010